சென்னை அருகே நடந்த சோகம்..!! ஐடி ஊழியரை அடித்தே கொன்ற ஓலா கால் டாக்ஸி ஓட்டுநர்!
சென்னை அருகே நடந்த சோகம்..!! ஐடி ஊழியரை அடித்தே கொன்ற ஓலா கால் டாக்ஸி ஓட்டுநர்!

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உமேந்தர் (34). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு உமேந்தர் விடுமுறையில் சென்னைக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் உமேந்தர் தனது உறவினர்களுடன் நேற்று இரவு கேளம்பாக்கத்தில் உள்ள மெரினா மாலில் படம் பார்த்துவிட்டு மீண்டும் கூடுவாஞ்சேரி செல்வதற்காக ஓலா கார் புக்கிங் செய்துள்ளார். அப்போது காரில் பயணம் செய்வோர் எண்ணிக்கை தொடர்பாக ஓலா கார் டிரைவரான ஆத்தூரைச் சேர்ந்த ரவி (41) என்பவருக்கும், உமேந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ஓலா கார் டிரைவர் ரவி, தான் வைத்திருந்த செல்போனால் உமேந்தரை தாக்கியதாக தெரிகிறது. அப்போது அவரது செல்போன் நெற்றி பொட்டில் பட்டு உமேந்தர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார், உமேந்தர் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஓலா கார் டிரைவர் தாக்கியதில் உமேந்தர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஓலா கார் டிரைவர் ரவி மீது கொலை மற்றும் ஆபாசமாக பேசுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓலா கார் டிரைவர் தாக்கி பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

