சேலத்தில் சோகம்.. நடந்து சென்ற நகராட்சி பணியாளர் சாலையில் விழுந்து மரணம்..!
சேலத்தில் சோகம்.. நடந்து சென்ற நகராட்சி பணியாளர் சாலையில் விழுந்து மரணம்..!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (50). நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் உதவியாளராக பணியாற்றி வந்த இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன் ஆத்தூர் நகராட்சிக்கு பணி மாறுதலாகி வந்துள்ளார்.
இதனால், தினசரி தனது சொந்த ஊரில் இருந்து பணிக்காக ஆத்தூருக்கு பேருந்தில் சென்று வந்துள்ளார். வழக்கம்போல் இன்று சேலத்தில் இருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
பின்பு அங்கிருந்து நகராட்சி அலுவலகத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென நெஞ்சுவலி காரணமாக மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார்.

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி அலுவலர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இதையடுத்து வெங்கடேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

