தந்தை கண் முன்னே சோகம்.. பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி..!
தந்தை கண் முன்னே சோகம்.. பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி..!

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பாவாணர் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவர் 100 அடி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் கிருஷ்வந்த் (11). மூலக்குளத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
தினமும் தனது மகனை பன்னீர் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்று பள்ளிக்கு விடுவது வழக்கம். அதன்படி இன்று காலை கிருஷ்வந்த் ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
ரெட்டியார்பாளையம் அருகே வந்தபோது, எதிரே மற்றொரு ஸ்கூட்டரில் வந்தவர் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது நிலைதடுமாறி ஸ்கூட்டரில் இருந்து பன்னீர் இடதுபுறமும், கிருஷ்வந்த் வலது புறமும் கீழே விழுந்தனர்.

அப்போது, புதுச்சேரியில் இருந்து வந்த தனியார் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி கிருஷ்வந்த் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தன் கண் முன்னே நடந்த இந்த கோர விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பன்னீர் தனது மகனின் உடலை மடியில் தூக்கி வைத்து கதறி அழுதார்.
இதுபற்றி தெரியவந்ததும் மாணவனின் தாய் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்த்து கதறி அழுதனர். பொதுமக்களும் கூடினர்.

அப்போது, விபத்து ஏற்படுத்திய பஸ்சின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகளை அவர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து மூலக்குளம் குண்டு சாலை மற்றும் இந்திரா காந்தி சிலையில் இருந்து கொம்பாக்கம் வழியாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதற்கிடையே விபத்து குறித்து அறிந்து கிழக்குப்பகுதி எஸ்பி மாறன், கோரிமேடு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கிருந்து மாணவன் கிருஷ்வந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

