செங்கல்பட்டு அருகே சோகம்.. லாரி மீது அரசு பஸ் மோதல்.. 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி..!
செங்கல்பட்டு அருகே சோகம்.. லாரி மீது அரசு பஸ் மோதல்.. 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி..!

தொழுப்பேடு அருகே, அரசுப் பேருந்து ஒன்று முன்னால் சென்ற லாரியின் மீது மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 10 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி 50 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று இன்று (8-ம் தேதி) காலை சென்று கொண்டிருந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, இரும்புக் கம்பி ஏற்றிச் சென்ற லாரியின் இடது பக்கம் பயங்கரமாக மோதியது.
இதில், பேருந்தில் பயணித்த 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும், 10 பயணிகள் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இறந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதணைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

