திண்டுக்கல் அருகே சோகம்.. புதுமாப்பிள்ளை கத்தியால் குத்திக்கொலை..!
திண்டுக்கல் அருகே சோகம்.. புதுமாப்பிள்ளை கத்தியால் குத்திக்கொலை..!

திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்த நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (26). தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தென்றல் தேன்மொழி என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், பிரபாகரன் நேற்று இரவு அவரது நண்பர் ஐம்புலியும்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்பவரின் பிறந்தநாள் விழாவிற்காக நண்பர்களுடன் பாலகிருஷ்ணாபுரத்தை அடுத்த ஏர்போர்ட் நகருக்குச் சென்றார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பிரபாகரனை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை தடுக்க முயன்ற அனுமந்த நகரைச் சேர்ந்த கார்த்திக்(27), வினோத் கண்ணன் (20) ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்திக்குத்தில் பலியான பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த கார்த்திக், வினோத் கண்ணன் ஆகிய 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
புதுமாப்பிள்ளை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

