2 ஆண்டுகளுக்கு பின் ரயில் சேவை.. மகிழ்ச்சியில் கோவை, ஈரோடு, திருப்பூர் மக்கள்.. ஆனால்?
2 ஆண்டுகளுக்கு பின் ரயில் சேவை.. மகிழ்ச்சியில் கோவை, ஈரோடு, திருப்பூர் மக்கள்.. ஆனால்?

ஈரோட்டில் இருந்து தினமும் கோவைக்கு காலை 7.15 மணிக்கு திருப்பூர் வழியாக பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதேபோல் கோவையில் இருந்து மீண்டும் மாலை 6.30 மணிக்கு ஈரோட்டுக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது.
இந்த ரயிலில் திருப்பூர் மற்றும் கோவைக்கு வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் சென்று வந்தனர். பேருந்து கட்டணத்தைவிட குறைந்த கட்டணம் என்பதாலும், காலை, மாலையில் அலுவலக நேரத்தை சார்ந்தது என்பதாலும் இந்த ரயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் கோவை, திருப்பூருக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதனால் வேறு வழியின்றி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்துகளில் சென்று வந்தனர் . திருப்பூருக்கு ரூ.35, கோவைக்கு ரூ.80-ம் பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால், ஈரோடு -கோவை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்ததால் மத்திய அரசு கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி உத்தரவிட்டது. இதனால் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் படிப்படியாக மீண்டும் விடப்பட்டன.
இதைத்தொடர்ந்து ஈரோடு-கோவை பயணிகள் ரயிலும் இன்று முதல் இயக்கம் தொடங்கியது. இந்த ரயிலில் இன்று திருப்பூர், கோவைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்தனர். இந்த பயணிகள் ரயிலில் முன்பு 10 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது 6 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

மேலும், முன்பு ரயிலில் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு செல்வதற்கு ரூ.15, கோவை செல்வதற்கு ரூ.25 என கட்டணம் இருந்தது. ஆனால் தற்போது திருப்பூர் செல்வதற்கு ரூ.35, கோவை செல்வதற்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வை திரும்பபெற்று முந்தைய கட்டணத்தையே அமல்படுத்த பயணிகள் கோரிக்கை விடுத்தனர். ஈரோடு-கோவை பயணிகள் ரயில் இன்று முதல் ஓட தொடங்கியதால் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
newstm.in

