‘ப்ளூ டிக்’ பெற்றவர்களுக்கு புதிய அம்சம்.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது டிவிட்டர்..!
‘ப்ளூ டிக்’ பெற்றவர்களுக்கு புதிய அம்சம்.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது டிவிட்டர்..!

சமூக ஊடகங்களில் முதன்மையான ஒன்றாக விளங்கி வரும் ட்விட்டர், தனது பயனர்களுக்கு CoTweets என்ற புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
ஒரு ட்வீட்டின் உரிமையை மற்றொரு நபருடன் பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்த CoTweets அம்சம். ட்விட்டரில் ப்ளூ டிக் (Blue Tick) எனப்படும் உரிமையை பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CoTweets-ஐ பயன்படுத்த, ஒரு ட்வீட்டை உருவாக்கும் குறிப்பிட்ட அந்த பயனர், மற்றொருவரை பாப் அப் மூலம் அந்த ட்வீட்டில் இணைந்துக் கொள்ள அழைப்பு விடுக்க முடியும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபருக்கு அந்த ட்வீட்டில் இணைந்து கொள்வதை ஏற்பதற்கான மற்றும் நிராகரிப்பதற்கான பாப் அப்-ஐ பெறுவார்கள்.
அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், இருவரையும் இணை ஆசிரியர்களாக கொண்டு அந்த குறிப்பிட்ட ட்வீட் இரண்டு கணக்குகளில் இருந்து ஒரே சமயத்தில் பதிவு செய்யப்படும்.

அமெரிக்கா, கனடா மற்றும் கொரியாவில் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்குகளுக்கு மட்டும் சோதனை முறையில் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில், CoTweets ஐ மக்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்து கொண்டு, இந்த அம்சத்தை அனைத்து நாடுகளுக்கும் வழங்கலாமா என முடிவு செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

