குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது உக்ரைன் படைகள் தான்.. ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு !!
குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது உக்ரைன் படைகள் தான்.. ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு !!

உக்ரைனின் குழந்தைகள் மருத்துவமனை மீது உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 16ஆவது நாளாக நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா, உக்ரைனின் பல நகரங்கள் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. போரை நிறுத்த அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. ஐ.நா. அமைப்பும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த போரால், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலரும் உயிரிழந்து உள்ளனர். எனினும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்தவில்லை. உக்ரைனின் அரசு அலுவலகங்கள், காவல்துறை, உளவுத்துறை அலுவலகங்களை குறிவைத்து ரஷ்யா தகர்த்து வருகிறது. ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன என உக்ரைன் அரசு குற்றச்சாட்டு தெரிவித்தது. இந்த சம்பவத்தில் 17 பேர் காயம் அடைந்தனர். 3 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதில் மருத்துவமனை மற்றும் பிரசவ வார்டு உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன. இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், குழந்தைகள் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் உக்ரைன் அரசால் நடத்தப்பட்டு உள்ளது என ரஷ்ய ராணுவம் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது. உக்ரைன் அதிபரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், ஐ.நா. அமைப்புக்கான ரஷ்யாவின் பிரதிநிதி டிமிட்ரி போலியான்ஸ்கி தனது ட்விட்டர் பதிவில், போலியான செய்தி எப்படி பிறந்துள்ளது என காணுங்கள் என தெரிவித்து உள்ளார்.
ரஷ்யாவின் மரியுபோலில் தாக்குதலை நிறுத்த உறுதி அளித்தது. இதனால், அந்த பகுதியில் சிக்கியிருக்கும் குடிமக்கள் தப்பி செல்ல முடியும். ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீர் மற்றும் மின் வசதி இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா முன் வந்தது. எனினும், இரு நாடுகளும் மக்கள் வெளியேறும் நடவடிக்கை தோல்வி அடைந்ததற்கு ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
newstm.in