உஷார்! செல்ஃபோன் டவர் அமைத்து தருவதாக ரூ.23 லட்சம் மோசடி!!
உஷார்! செல்ஃபோன் டவர் அமைத்து தருவதாக ரூ.23 லட்சம் மோசடி!!

செல்ஃபோன் டவர் அமைக்க பணம் தருவதாகக் கூறி 23 லட்ச ரூபாய் மோசடி செய்த டெல்லியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு, செல்போன் டவர் அமைக்க முன்பணம் 40 லட்சம் மற்றும் மாத வாடகை 40 ஆயிரம் தருவதாக குறுஞ்செய்தி வந்தது. அதை நம்பி அவர் செய்தி வந்த எண்ணை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
இந்நிலையில் 2018 முதல் இரண்டு ஆண்டுகளாக அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி ராஜேந்திரனிடமிருந்து 23,98,900 ரூபாயைப் பெற்றுள்ளனர். ஆனால் டவர் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேந்திரன் அரியலூர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்கொடுத்தார். இதனையடுத்து அந்த கணக்கில் இருந்து 9 லட்சத்தை போலீசார் முடக்கினர். மேலும் குற்றவாளிகள் டெல்லியிலிருந்து செயல்படுவது தெரியவந்தது.

போலீசார் டெல்லிக்கே சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து மருதுபாண்டியன், ராஜேஷ், முருகேசன், ராஜ்கிஷன் ஆகிய நான்கு பேரை கைதுசெய்து, 3 லேப்டாப்கள், 42 செல்போன்கள், 18 சிம்கார்டுகள், 19 ஏடிஎம் அட்டைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றாலும் 15 ஆண்டுகளாக அவர்கள் டெல்லியில் வசித்து வந்துள்ளனர். மேலும் வங்கி கணக்கு ஆரம்பித்து கொடுத்தால் இவ்வளவு பணம், செல்போன் சிம் வாங்கினால் இவ்வளவு பணம் என அனைத்தையும் இறந்தவர்கள் பெயரில் வாங்கி செயல்பட்டுள்ளனர்.
newstm.in

