வீடு தேடி வரப்போகுது தடுப்பூசி.. மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..!
வீடு தேடி வரப்போகுது தடுப்பூசி.. மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..!

‘ஜூன் - ஜூலை மாதங்களில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்’ என, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில், “உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் 191 கோடி 'டோஸ்' கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஜூன் முதல் ஜூலை வரை வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் யாரும் இல்லை என்ற வகையில், அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
அதற்காக, குக்கிராமங்கள், முதியோர் இல்லங்கள், பள்ளிகள், கல்லூரிகள், சிறைச்சாலைகள், செங்கல் சூளைகள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
விரைவில் காலாவதியாகக்கூடிய தடுப்பூசிகளை முதலில் பயன்படுத்த வேண்டும். வெளிநாடு செல்வோர் 'பூஸ்டர்' தடுப்பூசிக்கு விண்ணப்பிக்கும் போது, பயண ஆவண நகல்களை கோருவதாக புகார்கள் வந்துள்ளன.
அவ்வாறு ஆவண நகல்களை கேட்கக் கூடாது என சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

