அட கொடுமையே.. பீஸ்ட் டிக்கெட்டை பிளாக்கில் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது !
அட கொடுமையே.. பீஸ்ட் டிக்கெட்டை பிளாக்கில் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது !

பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவான ’பீஸ்ட்’ திரைப்படம் தியேட்டரில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படத்தை அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள். படம் முடிந்ததும் விஜய்யின் தீவிர ரசிகர்களே பீஸ்ட் திரைப்படம் தங்களுக்கு ஏமாற்றத்தை தந்ததாக தெரிவித்தனர். சிலர் படம் சூப்பர் என்றும் கூறினர். இதனால் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் சென்னை விருகம்பாக்கம் பகுதி தலைவராக இருந்து வருபவர் வேல் முருகன். இவர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கெட்டை மன்றத்தின் சார்பாக 180 டிக்கெட் காசி டாக்கீஸ் தியேட்டரிலிருந்து பெறப்பட்டதாகவும், அதில் 46 டிக்கெட்டை மட்டும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

மீதியுள்ள 134 டிக்கெட்களை தியேட்டர் கவுண்டர் அருகே ரூ.300-க்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு விரைந்த எம்.ஜி.ஆர் நகர போலீசார் அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வழக்கு பதிவு செய்தார். பின்னர் ஜாமினில் வேல் முருகனை விடுவித்தனர். அவரிடம் இருந்து 134 டிக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
newstm.in

