யூட்யூபர்களுக்கு எச்சரிக்கை.. 22 சேனல்களை முடக்கிய மத்திய அரசு
யூட்யூபர்களுக்கு எச்சரிக்கை.. 22 சேனல்களை முடக்கிய மத்திய அரசு

தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக 22 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கியுள்ளது.
கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான யூட்யூப் தளம், மக்கள் நேரடியாக வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து அதன்மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகள் ஊரடங்கில் யூட்யூபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில சேனல்கள் உண்மைத்தன்மையுடன் இருந்தாலும் பெரும்பாலானவை இஷ்டத்துக்கு செய்திகளையும், தகவல்களையும் பரப்பி வருகின்றனர்.

அந்த வகையில், 22 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் பொது ஒழுங்கு குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக 22 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. இதில், பாகிஸ்தானை சேர்ந்த 4 செய்திச் சேனல்களும் அடங்கும், எனத் தெரிவித்துள்ளனர். மேலும், 3 டிவிட்டர் கணக்குகள், ஒரு முகநூல் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளத்தையும் முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட 22 சேனல்களில் 18 சேனல்கள் இந்தியாவை சேர்ந்தவை. 4 சேனல்கள் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுபவை. கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் தற்போது முதன் முறையாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
newstm.in

