என்னவாயிற்று..? - டெல்லி பயணத்தை பாதியில் முடித்து சென்னை திரும்பும் ஈபிஎஸ்
என்னவாயிற்று..? - டெல்லி பயணத்தை பாதியில் முடித்து சென்னை திரும்பும் ஈபிஎஸ்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிடம் அழைத்தது. இதனை ஏற்று எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி அசோகா ஓட்டலில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவிலும் கலந்துகொண்டார்.
இதனையடுத்து டெல்லியில் எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டு இருந்தார். அதாவது நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ள புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவும், முக்கியமாக டெல்லியில் தங்கியிருக்கும் நேரத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருந்தார்.

இந்த சந்திப்பின் போது அதிமுக உள்கட்சி பிரச்சினை, ஓ.பன்னீர் செல்வம் விவகாரம் ஆகியவற்றை எடுத்து விளக்கமாக கூறி டெல்லி பாஜகவின் ஆதரவையும் பெற்றுவிட திட்டமிட்டு இருந்தார். ஆனால் தனது பயண திட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மோடி, அமித்ஷா இருவரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்காமலேயே திரும்புகிறார். அவரது முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இது தொடர்பாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரதமர் மோடியின் குட் புக்கில் எடப்பாடி பழனிசாமி இருந்தாலும் நேரம் ஒதுக்கி கொடுக்கவில்லை. அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளை பாஜக மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சகிகலா ஆகியோர் தனித்தனியாக இயங்குவதால் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்களை ரகசியமாக கேட்டறிந்து வருகிறார்கள்.

தற்போதைய சூழலில் இந்த பிரிவுகள் அதிமுகவுக்கு பலவீனமாகவே இருக்கும். இதே பிளவுகளுடன் 2024 பொது தேர்தலை சந்தித்தால் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றியை பாதிக்கும் என்று மோடியிடமும், அமித் ஷாவிடமும் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கணிப்பாளர் ஒருவர் தெளிவுப்படுத்தி இருக்கிறார். இதனால் ஒருங்கிணைந்து செல்லுங்கள் என இருவரும் கூறிவிட்டால் என்னசெய்வது என எடப்பாடி பழனிசாமி கருதியதாக கூறப்படுகறது. பாஜக தலைவர்களின் மனநிலையை டெல்லியில் தங்கியிருந்த போது எடப்பாடி பழனிசாமி கேள்விப்பட்டுள்ளார். இதனால் மோடி, அமித் ஷாவை சந்திக்காமல் சென்னைக்கு திரும்புகிறார்.
இதோடு மட்டுமல்லாமல் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக வங்கி கணக்குகளை முடக்கக்கோரி பொருளாளர் என்ற முறையில் ஆர்பிஐ வங்கியின் சென்னை மண்டல தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கருத்தில்கொண்டும் உடனடி ஆலோசனை மேற்கொள்ள டெல்லி பயணத்தை பாதியில் விட்டுவிட்டு அவர் சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது.
newstm.in

