எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்த ரூ.1.31 கோடி என்ன ஆனது..? தூய்மை பணியாளர்கள் மனு..!
எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்த ரூ.1.31 கோடி என்ன ஆனது..? தூய்மை பணியாளர்கள் மனு..!

விழுப்புரம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பேரணியாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட துப்புரவு தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பது, “விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் தற்போது 128 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறோம்.

கடந்த ஆறு மாதங்களாக எங்கள் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்த ஒரு கோடியே 31 லட்சத்து 62 ஆயிரத்து 344 ரூபாயை கூட்டுறவு கடன் தொகைக்கான தவணையாக செலுத்தவில்லை.
இதனால், நாங்கள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தொகைக்கு கூடுதல் வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, குடும்பத் தேவைக்காக முன் கடன் பெற முடியாத நிலையும் உருவாகியுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், வரும் 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

