ஆளுநர் என்ன செய்யப்போகிறார்? - மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்ற நீட் விலக்கு மசோதா !
ஆளுநர் என்ன செய்யப்போகிறார்? - மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்ற நீட் விலக்கு மசோதா !

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பாக கடந்த ஆண்டு செப்.13ஆம் தேதி சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதாவை, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் 142 நாட்களுக்குப்பின் கடந்த 1ஆம் தேதி பேரவைத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பியதுடன், சட்டமுன்வடிவை மறு பரிசீலனை செய்யும்படியும் தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூடியுள்ளது.
மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது. ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த முறை திருப்பி அனுப்பாமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in

