காதலியுடனான நெருக்கமான போட்டோக்களை அழிக்க பாஸ்வேர்டு எங்கே? - இளைஞருக்கு நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு !!
காதலியுடனான நெருக்கமான போட்டோக்களை அழிக்க பாஸ்வேர்டு எங்கே? - இளைஞருக்கு நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு !!

இணையத்தில் ரகசியமாக சேமித்து வைத்திருக்கும், தான் காதலித்த இளம்பெண்ணின் புகைப்படங்களை அழிக்க, போலீஸாரிடம் பாஸ்வேர்டை தெரிவிக்கவேண்டும் என்று கூறி நாகர்கோவில் இளைஞருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் செய்யது முகமது. இவர் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில், தானும் செய்யது முகமதுவும் காதலித்தோம். அப்போது இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். ஆனால், தற்போது அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக முகமது மிரட்டுகிறார், அதனை அழித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், என இளம்பெண் கூறியிருந்தார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் எந்தப் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடவில்லை. அவர் மீது வேறு எந்த வழக்கும் இல்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும், என்றார்.
ஆனால், காவல்துறை தரப்பில் வாதிடுகையில். மனுதாரர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடவில்லை. இருப்பினும் இணையத்தில் தனி கடவுச்சொல் போட்டு புகைப்படங்களை மறைத்து வைத்துள்ளார், எனக் தெரிவித்தார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் போலீஸாரிடம் கடவுச் சொல்லை (பாஸ்வேர்டு) வழங்க வேண்டும். அதைப் பயன்படுத்தி மனுதாரர் இணையத்தில் மறைத்து வைத்துள்ள புகைப்படங்கள், வீடியோக்களை விசாரணை அதிகாரி அழிக்க வேண்டும். மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.
மனுதாரர் சாட்சியங்களை அழிக்கக் கூடாது. கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை தலைமறைவாகக் கூடாது. இதை மீறினால் மனுதாரருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை கீழமை நீதிமன்றம் ரத்து செய்யலாம், என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
newstm.in

