டிஆர்பியில் எந்த சீரியல் முதலிடம்?: மொத்தமாக ஆக்கிரமித்த சன் டிவி.. விஜய் டிவிக்கே இந்த நிலைமையா?
டிஆர்பியில் எந்த சீரியல் முதலிடம்?: மொத்தமாக ஆக்கிரமித்த சன் டிவி.. விஜய் டிவிக்கே இந்த நிலைமையா?

தொலைக்காட்சித் தொடர்களுக்கான வாராந்திர டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்த வாரமும் சன் தொலைக்காட்சியின் தொடர்களே ஆக்கிரமித்துள்ளன.
கடந்த எட்டு வாரங்களாக சன் தொலைக்காட்சியின் தொடர்கள் மட்டுமே முன்னிலை இடம் வகித்து வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் விஜய் தொலைக்காட்சியின் 'பாக்கியலட்சுமி' தொடர் முதலிடத்தில் இருந்தது. அதனைப் பின்னுக்குத்தள்ளி சன் தொலைக்காட்சி கடந்த எட்டு வாரங்களாக முதலிடத்தில் உள்ளது. இதன் முக்கிய காரணம் கயல் என்ற தொடர் தான்.

கயல் தொடர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சன் தொலைக்காட்சியில் வாரநாள்களில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கயல் தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் வாரமே முன்னணி தொடர்களைப் பின்னுக்குத் தள்ளி டிஆர்பி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. கதைக்களமும், கதாபாத்திர வடிவமைப்பும், ஒளிபரப்பான நேரமும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
அதற்கு அடுத்தபடியாக சுந்தரி தொடர். இதுவும் சன் தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகக்கூடிய தொடர். இதுவும் கடந்த எட்டு வாரங்களாக டாப் 5 இடத்தில் இடம்பெற்று வருகிறது.
வானத்தைப்போல தொடர் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆறு வாரங்களாக டாப் 3 இடங்களில் இந்த தொடர் நீடித்து வருகிறது. அண்ணன் - தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்த கதை என்பதால் ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

முதல் மூன்று இடங்களிலும் சன் தொலைக்காட்சி தொடர்கள் இடம் பெற்ற நிலையில், நான்காவது இடத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' தொடர் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அதிகமாக சமூக வலைதளங்களில் கேளிக்கு உள்ளான கதாபாத்திரம் பாரதி கண்ணம்மா.
இந்த வாரம் ஐந்தாவது இடத்தில் ரோஜா தொடர் இடம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாக்கியலட்சுமி தொடர் 6ஆவது இடத்தையும், கண்ணான கண்ணே 7ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அடுத்ததாக, விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 8ஆவது இடத்தையும், ராஜா ராணி 9ஆவது இடத்தையும், சன் தொலைக்காட்சியின் அபியும் நானும் தொடர் 10ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
இதில் சோகமான முடிவு என்னவென்றால், முதல் 20 இடங்களுக்கான டிஆர்பி பட்டியலில் ஒன்று கூட ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தொடர்கள் இடம் பெறவில்லை. ஜீ தமிழ் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பின்தங்கியுள்ளது.
newstm.in

