யார் மீதோ இருந்த கோபத்தை மாணவன் மீது காட்டிய ஆசிரியர்!!
யார் மீதோ இருந்த கோபத்தை மாணவன் மீது காட்டிய ஆசிரியர்!!

திண்டுக்கல் அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் அடித்ததால் படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
ரெட்டியார்சத்திரம் அருகே கே.புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த குமார் - பிருந்தா தம்பதி கூலி வேலை செய்து வருகின்றனர். அவர்களுடைய மகன் சசிகுமார். சசிகுமார் புதுக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கம்ப்யூட்டர் வகுப்பின்போது ஆசிரியர் வராததால் விளையாடச் செல்வதற்கு தலைமையாசிரியர் லட்சுமணனிடம் அனுமதி கேட்க அவர் சென்றுள்ளார். அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் லட்சுமணன், சிறிது நேரம் கழித்து மாணவன் சசிகுமாரிடம் விவரம் கேட்டுள்ளார்.

அப்பொழுது மாணவன் சசிகுமார் விளையாட செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஏற்கெனவே செல்போனில் வாக்குவாதம் செய்து கடும் கோபத்தில் இருந்த தலைமையாசிரியர் லட்சுமணன் அந்த கோபத்தை மாணவன் சசிகுமார் மீது காட்டியுள்ளார்.
மாணவனை பிரம்பால் இரண்டு கைகள் மற்றும் முதுகு என பல இடங்களில் அடித்துள்ளார். இதில் மயக்கமடைந்த மாணவன் அங்கேயே கீழே விழுந்தார். பிறகு அவரை மற்ற மாணவர்கள் வீட்டில் விட்டுச் சென்றனர்.
வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய சசிகுமாரின் தாயார் பிருந்தா மகன் இருந்த நிலைமையை கண்டு உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
மேலும் இது தொடர்பாக ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் லட்சுமணன் மாணவனை அடித்ததாக புகார் கொடுத்துள்ளார். ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் லட்சுமணனை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

