லாக்டவுனை கடத்தியது ஏன்..?: கைதான இன்ஜினீயர் பரபரப்பு வாக்குமூலம்..!
லாக்டவுனை கடத்தியது ஏன்..?: கைதான இன்ஜினீயர் பரபரப்பு வாக்குமூலம்..!

சென்னை அம்பத்தூர் காந்தி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் (42) தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் தங்கி, கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இவருடைய கடைசி ஆண் குழந்தை, கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிறந்ததால் அந்த குழந்தைக்கு ‘லாக்டவுன்’ என செல்லமாக பெயரிட்டு அழைத்து வந்தனர்.
தற்போது ஒன்றரை வயதாகும் குழந்தை ‘லாக்டவுன்’ கடந்த 6-ம் தேதி மாயமானது. எங்கு தேடியும் கிடைக்காததால் அம்பத்தூர் போலீசில் கிஷோர் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது அருகில் உள்ள ஏரியில் தவறி விழுந்துவிட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், 9-ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள ஒரு பஸ்சின் இருக்கையில் குழந்தை ‘லாக்டவுன்’ இருப்பது தெரியவந்தது. மாயமான 3 நாட்களுக்கு பிறகு குழந்தை ‘லாக்டவுன்’ கோயம்பேடு போலீசாரால் மீட்கப்பட்டது.

அம்பத்தூரில் மாயமான குழந்தை, கோயம்பேடு பஸ்சில் வந்தது எப்படி? என அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கிஷோர் வேலை செய்யும் அதே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் வேலை செய்து வந்த இன்ஜினீயர் பாலமுருகன் (28) என்பவர் அங்கு கட்டட வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுஷாந்த் பிரதான் (25) என்பவர் உதவியுடன் குழந்தை ‘லாக்டவுனை’ கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, போலீசாரிடம் இன்ஜினீயர் பாலமுருகன் அளித்த வாக்குமூலம்; “எனது நண்பர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தை உள்ளது.

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே நான் குழந்தையை வளர்க்கும் ஆசையில் சுஷாந்த் பிரதான் உதவியுடன் கிஷோரின் குழந்தை ‘லாக்டவுனை’ கடத்திச் சென்றேன்.
கடலூரில் உள்ள எனக்கு தெரிந்த வளர்மதி என்ற பெண்ணிடம் அந்த குழந்தையை சில நாட்கள் வைத்து பார்த்துக் கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். அதன்பிறகு என்னால் குழந்தையை பராமரிக்க முடியவில்லை.
மறுபுறம் போலீசாரும் குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். இதனால் போலீசுக்கு பயந்து, கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்றிருந்த ஒரு பஸ்சின் இருக்கையில் குழந்தையை வைத்து விட்டு தப்பிச் சென்று விட்டேன்” என்று, அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

