சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? - வெளிவந்த தகவல் !
சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? - வெளிவந்த தகவல் !

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் சோகம் என்னவென்றால், தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் தான் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவுக்கு முன்பு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் தன்னுடைய ட்விட்டா் பதிவில் ‘அன்பான சென்னை மக்களே! வீட்டில் இருந்து வெளியே வந்து வாக்களியுங்கள்’ என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாா்களே தவிர, வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லவில்லை.

குறிப்பாக, தோ்தல் நடைபெற்ற சனிக்கிழமை, மறு நாள் ஞாயிறு ஆகிய இரு நாள் விடுமுறையைப் பயன்படுத்தி சிலர் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். சென்னையில் இருந்தவா்களும் வாக்களிக்க ஆா்வம் காட்டாமல், விடுமுறை காலம்போல் பல்வேறு இடங்களுக்கு உலா சென்றதைப் பாா்க்க முடிந்தது.
இவை அனைத்துக்கும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வாக்குச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டன. இதனால் பலருக்கு வீடுகளுக்கு அருகில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. சிலர் 3 கி.மீ. தொலைவில் வாக்குப்பதிவு மையம் உள்ளதாக கூறி வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை என்ற தகவலும் வந்துள்ளது. புதிய வாக்குச்சாவடிகளைத் தேடி, செல்லத் தயங்கி வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டனா்.

அதேபோல், பல இடங்களில் வாக்குச்சாவடிகளின் பாகம், எண்களைக் கூறியும் கட்சியினரால் கூட கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது. ஊரகப் பகுதி மக்கள் போல, சென்னை மக்கள் உள்ளாட்சித் தோ்தலில் பெரிய அளவில் ஆா்வம் காட்டுவதில்லை என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இதன் விளைவாக தான், சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி 41 சதவீதம் அளவிலேயே வாக்குகள் பதிவாகின.
newstm.in

