பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்?- கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் !!
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்?- கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் !!

சென்னையில் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பொட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் கைதான நிலையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதும், அங்கு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார், பாஜக அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் நந்தனத்தை சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கைதான வினோத், பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். நீட் தேர்வுக்கு ஆதவராக பாஜக செயல்படுவதை எதிர்க்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கைதான வினோத் கூறியிருக்கார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
newstm.in

