நித்யானந்தா ஆசிரமத்தில் சோதனை ஏன்? - கைலாசாவுக்கு கடத்தப்பட்டாரா இளம்பெண்?
நித்யானந்தா ஆசிரமத்தில் சோதனை ஏன்? - கைலாசாவுக்கு கடத்தப்பட்டாரா இளம்பெண்?

திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்ட நித்தியானந்தாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் ஆசிரமங்கள் உள்ளன. இந்த ஆசிரமத்தில் சிறியவர்கள், இளம் பெண்கள் முதல் முதியவர்கள் வரை சீடர்களாக உள்ளனர்.
கர்நாடகாவை தலைமையிடமாகக் கொண்டு பிடதியில் ஆசிரமம் அமைத்த நித்தியானந்தாவிற்கு கர்நாடகாவில் ஏராளமான சீடர்கள் உள்ளனர். இந்நிலையில் பெங்களூர் ஆர்.ஆர். நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஸ்ரீநாகேஷ் மற்றும் அவரது மனைவி ஓய்வு பெற்ற பேராசிரியர் மாலா இவர்களது மூத்த மகள் வைஷ்ணவி (24) மற்றும் அவரது இளைய மகள் வர்தினி (22) ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக நித்யானந்தாவின் சீடர்களாக இருந்து பிடதி ஆசிரமத்தில் பல்வேறு பணிகளை செய்து வந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் ஸ்ரீநாகேஷ் அவரது மனைவி மாலா மற்றும் மூத்த மகள் வைஷ்ணவி ஆகியோர் ஆசிரமத்தில் இருந்து வெளியேறினர். ஆனால், இளைய மகள் வர்தினி மட்டும் ஆசிரமத்திலேயே தங்கி தொடர்ந்து நித்யானந்தாவின் சீடராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கொரோனா காலத்தில் தனது மகளை பார்க்க ஆசிரம நிர்வாகிகள் அனுமதிக்காத நிலையில், செய்வதறியாமல் இரண்டு ஆண்டுகளாக தவித்து வந்த ஸ்ரீநாகேஷ் குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்ததாகவும், அதன் அடிப்படையில் கர்நாடக காவல் துறையினர் பிடதி ஆசிரமத்தில் தேடியதில் அவரது மகள் இல்லை என்று கூறப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீநாகேஷ் குடும்பத்தினர் தனது மகள் திருவண்ணாமலைக்கு கடத்தப்பட்டு இருப்பாரோ? என்று கருதி திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததனர். அதன் பேரில், காவல் ஆய்வாளர் ஹேமமாலினி தலைமையில் போலீசார் இரவு நித்தியானந்தா ஆசிரமத்திற்குள் நுழைந்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நித்தியானந்த ஆசிரமத்தில் இருந்த அனைத்து அறைகளையும் சோதனையிட்டு தீவிரமாகத் தேடினர். நித்தியானந்த ஆசிரமத்திற்குள் காவல்துறையினர் நுழைந்ததை அறிந்த சம்பவம் கிரிவலம் சென்ற பக்தர்கள் நித்தியானந்த ஆசிரமம் முன்பு குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடத்திய தேடுதலில் வர்தினி திருவண்ணாமலையிலும் இல்லை என அறிந்த ஸ்ரீ நாகேஷ் குடும்பத்தினர் மிகுந்த சோகத்துடன் ஆசிரமத்தை விட்டு வெளியேறி காரில் புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பெண் கைலாச நாட்டிற்கு இவர் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு எங்காவது கடத்தப்பட்டு மறைத்து வைத்துள்ளார்களா? என்ற குழப்பத்தில் ஸ்ரீ நாகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.
newstm.in

