ஏப்ரல் 2-ம் தேதி ஆஜராகணும்.. பிரபல நடிகருக்கு நீதிமன்றம் உத்தரவு..!
ஏப்ரல் 2-ம் தேதி ஆஜராகணும்.. பிரபல நடிகருக்கு நீதிமன்றம் உத்தரவு..!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.
இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, எஸ்.வி.சேகர் சார்பில் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நீக்கப்பட்டு விட்டதாகவும், இது தொடர்பாக மன்னிப்பும் கேட்கப்பட்டதாகவும், நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தையே தாம் பகிர்ந்ததாகவும், அதற்காக உடனடியாக மன்னிப்பும் கேட்கப்பட்டதாகவும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது.
காவல் துறை தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வரும் ஏப்ரல் 2-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அப்போது, பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி ஃபேஸ்புக்கில் எழுதிய அமெரிக்க வாழ் தமிழர் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
Next Story

