பெண்ணை அடித்து துன்புறுத்தல்: 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்!
பெண்ணை அடித்து துன்புறுத்தல்: 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது வீட்டில் கடந்த 4-ம் தேதி 10 சவரன் நகை மாயமானது குறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி சுமதி மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 7-ம் தேதி பெண் காவலர்கள் மெர்சினா, கல்பனா, உமா மகேஸ்வரி ஆகிய மூவரும் சுமதியை முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது மூவரும் சுமதியை கடுமையாக அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் காயம் அடைந்த சுமதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதையடுத்து பெண் காவலர்கள் 3 பேர் மீது தன்னை துன்புறுத்தியதாக சுமதி கடந்த 11-ம் தேதி எஸ்பியிடம் மனு அளித்தார்.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட எஸ்பி விசாரணையில், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது.
இந்நிலையில் பெண் காவலர்கள் மூவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு காவலர் முருகன் என்பவரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்தும் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
சாத்தான்குளத்தில் தந்தை-மகனை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலையத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

