இந்த நாட்டில் இனி பெண்களுக்கு கார் ஓட்ட உரிமை இல்லை !!
இந்த நாட்டில் இனி பெண்களுக்கு கார் ஓட்ட உரிமை இல்லை !!

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமையில்லையென்று தலீபான் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 21 ஆண்டுகள் நடந்து வந்த போரின் முடிவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி ஆட்சி அதிகாரத்தை தலீபான் பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றினர். அதாவது ஆப்கானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியதும் தலீபான் கைப்பற்றியது. ஆப்கானை கைப்பற்றியது முதற்கொண்டு பெண்களுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுகிறது. மனித உரிமைகளும் நசுக்கப்பட்டு வருகின்றன.
அரசு அலுவலகங்கள், வங்கிகள், ஊடக நிறுவனங்கள் இன்ன பிறவற்றில் பெண்கள் வேலை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஷரியத் சட்டம் (மத சட்டம்) அமல்படுத்தப்படும், ஆண்களுடன் பெண்கள் இணைந்து பணியாற்றக்கூடாது என்று தலீபான் அமைப்பின் மூத்த தலைவர் வகீதுல்லா ஹாசிமி அறிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், குறுகிய தொலைவுக்கு தவிர்த்து மற்ற இடங்களுக்கு ஆண் துணையின்றி பெண்கள் செல்ல போக்குவரத்து வசதி வழங்கப்படக்கூடாது என்று தலீபான்கள் உத்தரவிட்டனர். கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி மாணவிகளுக்கான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவிகள் உயர் கல்வி (6-ம் வகுப்பு முதல்) பெற முடியாத நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு ஐ.நா. சபை மற்றும் பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தாலும் தலீபான்கள் கண்டுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அடுத்த கட்டமாக அந்த நாட்டில் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்குவதை தலீபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலீபான்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் காபூல் போன்ற முக்கிய நகரங்களில் பெண்கள் வாகனங்கள் ஓட்டி வந்தனர். ஆனால் இனி அவர்கள் வாகனம் ஓட்ட முடியாது என்றும் அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டு விட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
newstm.in