முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உலகத் தமிழ் அமைப்பு வாழ்த்து!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உலகத் தமிழ் அமைப்பு வாழ்த்து!!

உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் இராசரத்தினம் குணநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு,
”உலகத் தமிழ் அமைப்பு 1991 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிறுவப்பட்டது; உலகளாவிய தமிழர்களின் அடிப்படை உரிமைகள், நீதி மற்றும் நலன்களைப் பாதுகாப்பது, முன்னெடுப்பது, மீட்டெடுப்பது ஆகியவற்றின் பொருட்டுக் கடந்த 31 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றது. தமிழர்களின் அரசியல் அதிகார மாண்பு, குமுகாய மேம்பாடு மற்றும் பண்பாட்டுத் தெளிவு ஆகியவற்றுக்காக உலகத் தமிழ் அமைப்பு தொடர்ந்து அயராது உழைக்கிறது.
இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து, பல சிக்கல்களில் தமிழர்களுக்கு நடுநிலை தவறி அநீதி இழைக்கிறது. உரிய நீதி வழங்க மறுக்கிறது. நீட், காவிரிச் சிக்கல்களில் இஃது அப்பட்டமாகத் தெரிந்தது. தொடந்து நம் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. எட்டுக்கோடி தமிழர்களின் முதலமைச்சர் ஒவ்வொரு சரக்கு மற்றும் சேவை வரி (GST) குழு கூட்டதிற்குச் செல்லும்போதும், ஒன்றிய அதிகாரியிடம் நம் செலவினங்களுக்காகக் கையேந்தும் நிலை இருப்பது பெரும் இழுக்கு.
எட்டுக்கோடி தமிழர்கள் இருந்தாலும்கூட, இந்திய ஒன்றியத்தில் நாம் “சிறுபான்மையினர்” என்கிறார்கள். அதைவிடக் குறைவான மக்கள் தொகைக் கொண்டது பிரித்தானியா! அதுபோல், தமிழ்நாட்டைவிடக் குறைவான மக்கள் தொகை கொண்டது பிரான்சு! இத்தாலி, இசுரேல், நார்வே எனப் பல நாடுகள் தமிழ்நாட்டைவிட மிகக் குறைவான மக்கள் தொகை கொண்டவை! ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களை இந்திய ஒன்றியத்தில் “சிறுபான்மை” என்கிறார்கள். பல தேசிய இனங்களும் பல தேசிய மொழிகளும் கொண்ட இந்திய ஒன்றியத்தில், இந்தி என்னும் ஒரு மொழியை ஆட்சி மொழியாக வைப்பது இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பெரும்பான்மையான மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் நடத்துவதாக அமையும். ஆதலால் அனைத்து தேசிய மொழிகளும் இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழிகளாக அமைய அரசியல் அமைப்பைத் திருத்தி அமைக்க ஆவன செய்ய வலியுறுத்துகின்றோம்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை தமிழ்நாட்டு அரசே நியமித்துக் கொள்ளும் சட்டப்பேரவை தீர்மானத்தை நிறைவேற்றியது என்பது மிகச்சிறந்த கல்வியாளர்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக வர பெரிதும் உதவும், மேலும் மாநில உரிமையை நிலைநாட்டும் ஒரு குறிப்பிடத்தக்க செயல் என மகிழ்ச்சியடைகின்றோம். நல்லாட்சி சிறக்க நல்வாழ்த்துகள்!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.