முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டிய யஷ்வந்த் சின்ஹா!
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டிய யஷ்வந்த் சின்ஹா!

இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக தற்போதுள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து வேட்புமனுத்தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கிய நிலையில், 29-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களமிறங்கி உள்ளார்.
இந்நிலையில், எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்து ஆதரவு கோரினார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து ஸ்டாலின் வரவேற்பளித்தார்.

இதன் பின் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, கொமதேக, மமக ஆகிய கட்சி நிர்வாகிகளிடம் யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கோரினார். அவருக்கு ஆதரவு அளிப்பது இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

