மருத்துவர் வராததால் பிரசவமான சில மணி நேரத்தில் இளம் பெண் உயிரிழப்பு..!!
மருத்துவர் வராததால் பிரசவமான சில மணி நேரத்தில் இளம் பெண் உயிரிழப்பு..!!

திருவாரூர் மாவட்டதை சேர்ந்தவர் அப்துல் ஜாபர்.இவருக்கு மும்தாஜ் பேகம் என்கிற மனைவியும், பர்வீன் பானு (23) என்கிற மகளும் உள்ளனர். இவரது மகளுக்கும், கும்பகோணம் பகுதியை சேர்ந்த பரக்கத்துல்லா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் ஆன நிலையில், பர்வீன்பானு கர்ப்பம் அடைந்தார்.
இந்த நிலையில், தனது முதல் பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு வந்த பர்வீன் பானு, பிரசவ வலி ஏற்பட்டு, கடந்த 7-ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 11-ம் தேதி அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததால் அவர் மருத்துவமனையிலேயே தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை முதல் உடல் சோர்வுடன் பர்வீன் பானு காணப்பட்ட நிலையில், இதுகுறித்து பணியில் இருந்த செவிலியர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர் வந்தவுடன் பார்க்க சொல்கிறோம் என செவிலியர்கள் தெரிவித்தனர். வெகுநேரமாகியும் மருத்துவர் வராததால் சேர்வுடன் காணப்பட்ட பர்வீன் பானு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பணியிலிருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த திருவாரூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பதட்டம் ஏற்படாமலிருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூரில், சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் நீண்ட நேரமாகியும் வராததால் பிரசவித்த இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

