‘தல’ தோனிக்காக ஒரு பாட்டு... தூள் கிளம்பும் சிஎஸ்கே வெறியன்ஸ்..!
‘தல’ தோனிக்காக ஒரு பாட்டு... தூள் கிளம்பும் சிஎஸ்கே வெறியன்ஸ்..!

கோவையை சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் பாடல் ஒன்றை இயற்றி, நடனமாடி தோனிக்கு அர்ப்பணிக்க அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், ஐபிஎல் டி20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் கால்பதிக்கும் இந்த சரவெடி போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு.
இ்ந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் 13-வது ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராவிட்டாலும் ஐபிஎல் போட்டி மீண்டும் அதன் தாயகமான இந்தியாவுக்கு திரும்புகிறது. இதன்படி 14-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 9 முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, பெங்களூரு, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
அந்த வகையில் ‘தல’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். குறிப்பாக ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடும் தோனிக்கு உலகமெங்கும் தமிழக ரசிகர்கள் உள்ளனர்.
தோனி அணியும் மஞ்சள் நிற டீஷர்ட், அவரது அணியின் எண்ணான 7 அடங்கிய டீஷர்ட் சிஎஸ்கே ரசிகர்கள் விரும்பும் ஆடையாகும். தோனியின் வெறியர்கள் என்று கூறக்கூடிய அளவில் உள்ள கோவை ரசிகர்கள் தாங்களே பாடல் ஒன்றை இயற்றி அதற்கு சிஎஸ்கே டீ ஷர்ட் அணிந்த 7 பேர் நடனமாடி அசத்தியுள்ளனர்.
நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் தோனியின் தலைமையிலான சென்னை அணி வெற்றிப்பெறவும், கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை புரிந்த தோனிக்கு அர்ப்பணிக்கவும் “மிரட்டல்” என்ற பாடலை இயக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

