2020 ஜனவரி 1 முதல் அகவிலைப்படி.. அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை..!
2020 ஜனவரி 1 முதல் அகவிலைப்படி.. அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை..!

மத்திய அரசு வழங்கியதைப் போல, தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை 2020 ஜனவரி 1 முதல் வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கூறியதாவது: “அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 1.1.2021 முதல் அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 சதவீதமாக உயர்த்தி வழங்கவும், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தை பொங்கலையொட்டி போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது வரவேற்கத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்கள் 1.7.2021 முதல் 31 சதவீத அகவிலைப்படியை ரொக்கமாக பெற்று வருகின்றனர். மேலும், மத்திய அரசு கடந்த 1.1.2020 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவையை 2021 டிசம்பர் மாத சம்பளத்துடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.
தமிழக அரசு அகவிலைப்படி நிலுவையை 2020 ஜனவரி 1 முதல் வழங்க வேண்டும்.போனஸ் சட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்குகிறது. மூன்றாண்டுகளாக தமிழக அரசு ரூ.3 ஆயிரம் மட்டுமே வழங்குகிறது.
எனவே தமிழக அரசு போனஸாக ரூ.7 ஆயிரம் அறிவிக்க வேண்டும். ஏ மற்றும் பி பிரிவினர், கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கும் பொங்கல் கருணைத்தொகை வழங்க வேண்டும்” என்றனர்.

