அதிரடி! பெண்களை ஏலம் விட்ட செயலி முடக்கம்!!
அதிரடி! பெண்களை ஏலம் விட்ட செயலி முடக்கம்!!

இஸ்லாமிய பெண்களை ஏலம் விட்டதாக புகார் எழுந்த புல்லி பாய் செயலி முடக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சுல்லி டீல்ஸ் என்ற செயலியில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு அவர்கள் விற்பனைக்கு என குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பயன்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்கள் பெண்களின் ட்விட்டர் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டிருந்ததை அடுத்து, அந்த செயலி முடக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது புல்லி பாய் என்னும் புதிய செயலியில் இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான மென்பொருள் பகிர்வு தளமான கிட் ஹப் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி ட்விட்டர் பதிவில் புகார் தெரிவித்திருந்தார். இத்தகைய தளங்களின் வாயிலாக நடைபெறும் பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை கேட்டுக் கொண்டும் அதற்கு பலனில்லை என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புல்லிபாய் செயலியில் தன்னுடைய புகைப்படம் வெளியிடப்பட்ட ஸ்க்ரீன்ஷாட்களைப் பகிர்ந்துள்ள அவர், இந்த விவகாரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியப் பெண்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் இத்தோடு முறியடிக்கப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் அமைப்பினரும், குரல் எழுப்பியுள்ளனர்.
newstm.in

