மலையாளம் பேசினால் நடவடிக்கையா? கடும் எதிர்ப்பால் உத்தரவை திரும்பபெற்ற டெல்லி அரசு மருத்துவமனை!!
மலையாளம் பேசினால் நடவடிக்கையா? கடும் எதிர்ப்பால் உத்தரவை திரும்பபெற்ற டெல்லி அரசு மருத்துவமனை!!

டெல்லியில் ஜி.பி.பண்ட் (ஜிப்மர்) அரசு மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த மருத்துவமனையில், ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே அலுவலக மொழியாக உள்ளதால் இதில் ஏதேனும் ஒன்றை தான் பயன்படுத்த வேண்டும் என கூறப்படுகிறது. மாறாக செவிலியர்கள் மலையாளத்தில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். அவர்கள் மலையாளம் தெரியாத சக ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் மலையாளத்தில் பேசுவதாகவும், அது நிறைய சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் செவிலியர் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றுள்ளது. மேலும் மருத்துவமனை நோயாளி ஒருவர் சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரிக்கு புகார் ஒன்றை அளித்தார். அதில், ஜிப்மர் மருத்துவமனையின் அலுவலக மொழியாக ஆங்கிலம், இந்தி இருக்கும்போது, சில செவிலியர்கள் மலையாளத்தில் பேசுகின்றனர் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழலில் இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பெரும்பாலான நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு மலையாளம் தெரியாதபோது அந்த மொழியில் பேசுவது உதவியற்ற நிலையையும், சிரமங்களையும் ஏற்படுத்துகிறது. எனவே அனைத்து செவிலியர்களும் பணியில் இருக்கும்போது தொடர்பு மொழியாக இந்தி அல்லது ஆங்கிலத்தையே பயன்படுத்தவேண்டும். அப்படி இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்த சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்த சுற்றறிக்கைக்கு செவிலியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கேரள மாநிலம் வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் உள்ளிட்டோர் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். மற்ற மாநிலங்களை சேர்ந்த செவிலியர்களும் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அந்த சுற்றறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் இன்று வாபஸ் பெற்றுள்ளது.
newstm.in

