நடிகர் சோனு சூட் வீட்டில் இரண்டாவது நாளாக சோதனை..!
நடிகர் சோனு சூட் வீட்டில் இரண்டாவது நாளாக சோதனை..!

மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் வீட்டிற்கு சென்றுள்ள வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர். முன்னதாக, நேற்று மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனை இரவு வரை நீண்டது.
லக்னோவில் இயங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் சோனு சூட் மேற்கொண்ட சொத்து ஒப்பந்தம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
ஜூஹூவில் அமைந்துள்ள சோனு சூட்டுக்கு சொந்தமான தொண்டு நிறுவனத்தின் அலுவலகம் உள்பட ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், “சோனு சூட்டின் நிறுவனத்திற்கும் லக்னோவில் இயங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கும் இடையே சமீபத்தில் நடந்த ஒப்பந்தம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த ஒப்பந்தத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது” என்றார். ஆனால், “சோனு சூட்டுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை இது” என, எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டபோது புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு திரும்ப உதவியதன் மூலம் சோனு சூட் அனைவரின் கவனத்தையும் ஈா்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

