நடிகர் சோனு சூட் தங்கை காங்கிரசில் இணைந்தார்..!
நடிகர் சோனு சூட் தங்கை காங்கிரசில் இணைந்தார்..!

ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர், முதல் முறை கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டபோது, புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்ததில் அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இதையடுத்து, கடந்த வருடம் இந்திய தேர்தல் ஆணையம், நடிகர் சோனு சூட்டை பஞ்சாப் மாநிலத்தின் அடையாளச் சின்னமாக அறிவித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பஞ்சாப் தேர்தல் ஆணையம், சோனு சூட் பஞ்சாப் மாநிலத்தின் அடையாளம் சின்னமாக நியமிக்கப்பட்டதை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

இதுகுறித்து சோனு சூட் தெரிவித்தபோது, தனது தங்கை மாளவிகா சூட் தேர்தலில் போட்டியிடுவதால், பஞ்சாப் மாநிலத்தின் அடையாளம் சின்னம் என்ற பொறுப்பிலிருந்து தானாக முன்வந்து விலகுவதாகக் கூறினார்.
இந்நிலையில் இன்று, சோனு சூட்டின் தங்கை மாளவிகா சூட், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரை வீட்டில் சந்தித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், “சோனு சூட் அவரது மனித தன்மைக்கும், அன்பிற்கும் பெயர் போனவர். அவரது பெயரை உலகம் அறியும். இன்று அவரது குடும்பத்தில் இருந்து ஒருவர் காங்கிரஸில் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாளவிகா சூட் மோகா தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

