அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் – நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் – நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!!

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யும் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தள்ளது.
கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சி விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கு தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி. - கே.சி.பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கட்சியில் உறுப்பினர்கள் முறைபடுத்தப்படவில்லை எனவும், உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை முறையாக தயாரிக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து, 21 நாட்கள் நோட்டீஸ் வெளியிட்டு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டது.
மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமனத்தை தேர்தல் ஆணையம் வெளியிடும் முன் தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்பதால், தனது நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் பழனிச்சாமி தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எப்படி இந்த வழக்கை தொடர முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு விளக்கமளித்த பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், பழனிச்சாமியின் நீக்கம் செல்லாது எனவும், 5 நாட்களில் எப்படி தேர்தல் நடத்த முடியும் எனவும், பல உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கவில்லை எனவும், தற்போது 27,000 உறுப்பினர்கள் புதிதாக இணைய தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இருப்பினும், ஒரு தரப்பு வாதத்தை கேட்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தேர்தலை ரத்து செய்ய தயங்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, அதிமுக, ஓபிஎஸ், ஈபிஎஸ், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
newstm.in

