வீடு புகுந்து வியாபாரியை கடத்த முயற்சி.. சதி திட்டம் போட்ட அதிமுக மகளிரணி நிர்வாகி கைது !!
வீடு புகுந்து வியாபாரியை கடத்த முயற்சி.. சதி திட்டம் போட்ட அதிமுக மகளிரணி நிர்வாகி கைது !!

வியாபாரியை வீடு புகுந்து கத்தியை காட்டி கடத்த முயன்ற அதிமுக பெண் நிர்வாகி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் வேலன் நகரைச் சேர்ந்தவர் பாபு. இவர் வாகனங்களுக்கு சீட் கவர் விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பாபுவுக்கும், அ.தி.மு.க மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் செல்விக்கும் இடையே இடம் வாங்குவது தொடர்பாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சனை நீண்டகாலமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி பாபுவின் வீட்டிற்குள் திடீரென 7 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது. அவர்கள் வைத்திருந்த கத்தியைக் காட்டி பாபுவை மிரட்டி கடத்த முயன்றுள்ளது. அப்போது, பாபுவின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வரவே கடத்தல் கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றது. இது குறித்து காவல்நிலையத்தில் பாபு புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சதித்திட்டம் வெளிவந்தது. அதாவது, அதிமுக மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் செல்வியின் தூண்டுதலின் பேரிலேயே அந்த கும்பல் பாபுவை கடுத்த முயன்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து செல்வி மற்றும் கடத்தலில் ஈடுபட முயன்ற 7 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வியாபாரியை அதிமுக நிர்வாகி கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

