அதிமுக பொதுக்குழு சற்றுமுன் தொடங்கியது... மேடை ஏறினார் இபிஎஸ்!! ஆதரவாளர்கள் உற்சாகம்..!!
அதிமுக பொதுக்குழு சற்றுமுன் தொடங்கியது... மேடை ஏறினார் இபிஎஸ்!! ஆதரவாளர்கள் உற்சாகம்..!!

கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளரும், அப்போதைய முதல்வருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அதன் பிறகு கட்சியில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது. அதன்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆட்சியை பொறுத்தவரை, முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்தனர்.
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அடைந்து ஆட்சியை இழந்தது. அதன்பிறகு உள்கட்சிக்குள் பிரச்சினை எழுந்தது. கடந்த மாதம் 23-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை கோஷத்தை கையில் எடுத்தனர். பொதுக்குழு கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியிருந்தது வெளிப்படையாக தெரிந்தது.

ஆனால், கூட்டத்தில் ஒற்றை தலைமை கொண்டுவர முடியாத நிலையில், நிறைவேற்றப்படுவதற்காக தயாராக இருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் அறிவிக்கப்பட்டதுடன், அதிமுக பொதுக்குழு மீண்டும் ஜூலை 11-ந் தேதி (இன்று) கூடும் என்று அறிவிக்கப்பட்டதிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவிற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் உத்தரவு பிறப்பித்தது. அதில், அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் பொதுக் குழு மேடைக்கு வந்து அமர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. அவருடன் தமிழ் மகன் உசேன் மேடையில் அமர்ந்துள்ளார்.
கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அமர்ந்துள்ளனர். காலை 6.30 மணிக்கு பசுமை வழிச்சாலையில் இருந்து புறப்பட்ட இபிஎஸ் 9 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பு வந்த உடன் பொதுக் குழு மேடையில் வந்து அமர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. இதனைத் தொடர்ந்து செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

