நிறைவு பெற்றது அனைத்துக்கட்சி கூட்டம்.. நிறவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்..!
நிறைவு பெற்றது அனைத்துக்கட்சி கூட்டம்.. நிறவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்..!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில், சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு பெற்றது.
நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, விசிக, மதிமுக உள்ளிட்ட 10 கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நீட் விலக்கு தொடர்பாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. வரும் 9-ம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வரைவுத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின்படி நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும் என விசிக வலியுறுத்தியது.
முன்னதாக, அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய உரையில், “சுப்ரீம் கோர்ட் உத்தரவை மேற்கோள்காட்டி நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார் கவர்னர் ஆர்.என்.ரவி. ஜனாதிபதிக்கு மசோதாவை அனுப்பாமலேயே திருப்பி அனுப்பி விட்டார் கவர்னர்.
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம். 2006-ல் நுழைவுத்தேர்வு தொடர்பான சட்டம் கொண்டு வரப்பட்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு வெளிப்படையானது என அப்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறியது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடருக்கான தேதியை விரைவில் சபாநாயகர் அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

