அம்பேத்கர் வியாபார பொருள்.. அண்ணாமலை அதிரடி பேட்டி..!
அம்பேத்கர் வியாபார பொருள்.. அண்ணாமலை அதிரடி பேட்டி..!

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் முதல் துறைமுகம் வரை நேற்று நடைபயணமாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அதன் பின்னர் அவர் அளித்த பேட்டி: “திமுக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகின்றன. அரசின் நிர்வாக சீர்கேடுகளால் பிரிவினைவாதம், கஞ்சா விற்பனை, சுரண்டல் லாட்டரி போன்ற சட்ட விரோத செயல்கள் தலைதூக்கியுள்ளன; அவற்றை தடுக்க வேண்டும்.
மக்களின் கோபத்திற்கு தமிழக அரசு ஆளாகியுள்ளது. கேரளாவில் கொரோனா தடுப்பூசி முகாம்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசின் திட்டங்களில் தமிழக அரசு 'ஸ்டிக்கர்' ஒட்டி தன் திட்டங்களை போல வழங்குகிறது.
தமிழகத்திலும் அரசின் திட்டங்களில் ஜனநாயக முறைப்படி முதல்வர் படத்துடன் பிரதமர் படமும் இடம் பெற வேண்டும். தமிழக அரசு நிறுவனமான 'எல்காட்' மின்னணு பொருட்களை உற்பத்தி செய்து அரசுக்கு தரமாக வழங்க வேண்டும். ஆனால், அரசு அந்த நிறுவனத்திடம் இருந்து ஒரு பொருள் கூட வாங்காமல் கமிஷன் கிடைப்பதால் தனியாரிடம் வாங்குகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் போல அம்பேத்கரை வைத்து அரசியல் செய்யும் கட்சி பாஜக அல்ல. அவர்களுக்கு அம்பேத்கர் வியாபார பொருள்; ஆனால் பாஜகவுக்கு அப்படி இல்லை.
அம்பேத்கர் பிறந்த, படித்த, வாழ்ந்த இடங்களான ம.பி., லண்டன், டில்லி உள்ளிட்ட பஞ்சதீர்த்தம் எனப்படும் ஐந்து இடங்களில் அவருக்கு நினைவிடம் கட்டிய பெருமை பாஜகவையே சாரும். அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்யக் கூடியது திருமாவளவன் கட்சி.
பாஜக அனைவருக்குமான கட்சி. எந்த ஒரு சமூகத்திற்கும் எதிரான கட்சி அல்ல. ஒரு பக்கம் ராமர் கோவிலும் இருக்க வேண்டும்; மற்றொரு பக்கம் இஸ்லாமிய மக்களுக்கு மசூதி இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சி” என்று அண்ணாமலை கூறினார்.

