கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை - அண்ணாமலை
கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை - அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று புதுவை வந்தார். கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
“புதுச்சேரியில் அற்புதமான, வித்தியாசமான பாஜக கூட்டணி ஆட்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு இருந்த முதல்வரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. ஒன்றிய அரசு, ஆளூநர் மீது பழிபோடுவதையே அவர் குறிக்கோளாக கொண்டிருந்தார். தற்போது ஆரோக்கியமாக ஒரு நல்லாட்சி நடக்கிறது. அதற்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக முக்கிய காரணம்.
இதே உத்வேகத்தில் தமிழ்நாட்டிலும் பாஜகவை வளர்க்க பாடுபடுவோம். புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வராது. மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தாமரை மலராது என்று பலர் விமர்சித்ததை இங்குள்ள தலைவர்கள் முறியடித்துள்ளனர். உழைப்புக்கு மக்கள் வெகுமதி கொடுப்பார்கள் என்று புதுச்சேரி பாஜகவை பார்த்து கற்றுக் கொண்டுள்ளோம். தமிழ்நாட்டிலும் அடி மேல் அடி எடுத்து வைத்து நிச்சயமாக ஆட்சியை பிடிப்போம்.
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து விட்டது. 3-வது அலையை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறோம். தற்போது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகளை திறக்கிறார்கள். நிச்சயமாக பள்ளிகளை திறக்க வேண்டும்.
ஏனென்றால், அசாதாரணமான சூழலில் 2 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு செல்லாமல் இருப்பதால் குழந்தைகளுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது.
பெற்றோர், ஆசிரியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தனிமனித இடைவெளி உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பள்ளி திறப்பை பாஜக வரவேற்கிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வீடுகளில் வைத்து விநாயகரை வழிபடலாம். ஆனால் ஊர்வலமாக செல்ல அனுமதியில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காலம் காலமாக சதுர்த்தி விழா நம்முடைய வாழ்க்கை முறையில் கலந்த ஒரு நிகழ்ச்சியாகும்.
டாஸ்மாக் கடையை திறந்து அதிகமான மக்களை கூட விடுகிறோம். கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு கட்டுப்பாடு விதிக்கலாம். ஆனால், நடத்தவே கூடாது என்பதை பாஜக ஏற்காது.
கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கையை சமர்ப்பித்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” எனக் கூறினார்.
முன்னதாக அவரை புதுவை மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார் மற்றும் பலர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.