ரத்தத்தில் அபிஷேகம்.. ரஜினி ரசிகர்களால் பரபரப்பு !
ரத்தத்தில் அபிஷேகம்.. ரஜினி ரசிகர்களால் பரபரப்பு !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன், சதீஷ், சூரி உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்தது.
அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் மோசன் ஃபோஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் ஃபோஸ்டரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே அண்ணாத்த படத்தின் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் ஆடுவெட்டி ரத்தாபிஷேகம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்த காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது. இதற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பால் முகவர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து அவரது ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் காட்டுமிராண்டித்தனத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்றுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த அவர்களின் அண்ணாத்த கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்த சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது .
ஏற்கனவே கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கிற கலாச்சாரத்தை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேரிலும், பதிவு தபால் மூலமும் பலமுறை கோரிக்கை முன் வைத்தும் தனது ரசிகர்களை கண்டித்து நல்வழிப்படுத்த தவறிய அவர் இவ்விகாரத்திலாவது உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும். தவறான கலாச்சாரம் தமிழகத்தில் அரங்கேற அவர் காரணமாக இருக்க கூடாது என திரு. ரஜினிகாந்த் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக் கொள்கிறது, என கூறப்பட்டுள்ளது.
newstm.in

