காபூல் நகரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்.. அச்சத்தில் மக்கள்- அமெரிக்கா அடுத்து என்ன செய்யப்போகிறது?
காபூல் நகரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்.. அச்சத்தில் மக்கள்- அமெரிக்கா அடுத்து என்ன செய்யப்போகிறது?

காபூலில் விமான நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்நாட்டு மக்கள் பீதியில் பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்று வருகின்றனர். தற்போது காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்க ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் காபூல் விமான நிலையம் வழியாக தப்பிச்செல்லும் நிலையில் அவ்விமான நிலையத்திற்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதாவது காபூல் விமான நிலையத்திற்கு வெளிப்பகுதியில் தலிபான்கள் சீல் வைத்தனர். மேலும் விமான நிலையத்திற்கு செல்லும் பாதைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிப்பு பணிகளை தலிபான்கள் தொடங்கியுள்ளனர். எனினும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தை சுற்றி ஏராளமான மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
இதற்கிடையே காபூல் விமான நிலையத்தில் வெகு விரைவில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க மிக அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது. அவர் மட்டுமன்றி, காபூல் விமான நிலைய பகுதியில் அமெரிக்கர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அமெரிக்க தூதரகமும் எச்சரித்திருந்தது.

காபூல் விமான நிலையம் அருகே ஐஎஸ்ஐஎஸ் கோரோசான் பிரிவு பயங்கரவாதிகள் அண்மையில் நடத்திய தாக்குதலில் 169 ஆப்கானிய மக்களும் 13 அமெரிக்க படை வீரர்களும் உடல் சிதறி இறந்தது குறிப்பிடத்தக்கது. அதிபர் பைடன் எச்சரித்திருந்த நிலையில், காபூலில் தற்போது மீண்டுமொரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இதன் சேதாரம் இன்னமும் முழுமையாக தெரியவரவில்லை. எனினும் காபூலில் மீண்டும் குண்டுவெடித்ததால், அங்கு பதற்றம் தொற்றியுள்ளது. அந்நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதற்கும் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என கூறப்படுகிறது.
newstm.in

