ஐஐடியில் மீண்டுமொரு மாணவர் தற்கொலை..!!
ஐஐடியில் மீண்டுமொரு மாணவர் தற்கொலை..!!

மராட்டிய மாநிலம் மும்பையில் இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், மும்பை ஐஐடியில் உள்ள மாணவர்கள் விடுதியின் 7-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் இன்று தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட மாணவன் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த தர்ஷன் மால்வியா (வயது 26) என்பது தெரியவந்துள்ளது.தர்ஷன் கடந்த ஜூலை மாதம் முதல் மும்பை ஐஐடியில் முதுகலை கல்வி பயின்று வந்துள்ளார். அவர் ஐஐடி மாணவர் விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்டுள்ள தர்ஷன் தீவிர மன உளைச்சலில் இருந்துள்ளார். மன உளைச்சல் தொடர்பாக அவர் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்று வந்துள்ளார் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.தர்ஷன் தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் தனது விடுதி அறையில் உள்ள பலகையில், ‘தான் தீவிர மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ எனவும் எழுதி வைத்துள்ளார்.
தர்ஷன் விடுதியின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். விடுதி காவலாளி இன்று தனது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தர்ஷன் தரையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தர்ஷனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

