வேலை தேடுவோரா நீங்கள்..?: அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்..!
வேலை தேடுவோரா நீங்கள்..?: அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்..!

மத்திய அரசின் தேசிய வாழ்வாதார சேவை மையம் நடத்தும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நாளை (12-ம் தேதி) நடைபெற உள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக, 1968-ம் ஆண்டு தேசிய வாழ்வாதார சேவை மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் தொழில் கல்வி பயிற்றுவித்தல், தொழில் வழிகாட்டல், ஆலோசனை வேலைவாய்ப்பு பயிற்சி ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த மையத்தின் சார்பில் சென்னையில் வேலை வாய்ப்பு முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், சென்னையை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பங்கேற்க முடியும். வயது வரம்பு 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த வேலை வாய்ப்பு முகாம், ‘தேசிய வாழ்வாதார சேவை மையம், வேலை வாய்ப்பு அலுவலகம், சாந்தோம் சர்ச் அருகில், சாந்தோம் மெயின் ரோடு, சாந்தோம் சென்னை’ என்ற முகவரியில் நாளை (12-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தவர்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை பெற்று பயனடையுமாறு துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

