பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை! முன்னாள் ரூட் தல கொண்டாட்டம்!
பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை! முன்னாள் ரூட் தல கொண்டாட்டம்!

திருமண விழாவில் உடன் படிக்கும் கல்லூரி மாணவர்கள் அன்பளிப்பாக வழங்கிய பட்டாகத்தியை வைத்து கேக் வெட்டி கொண்டாடிய மணமகன் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு சென்றப்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை திருவேற்காடு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவரின் திருமண விழா அண்மையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சக கல்லூரி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தனது நண்பன் திருமணத்திற்கு அன்பளிப்பாக 3 அடி நீள பட்டாகத்தியை மணமேடையில் மணமக்களுக்கு அன்பளிப்பாக வழங்கினர். அந்த பட்டாகத்தியை பெற்றுக் கொண்ட மணமகன் பட்டாகத்தியை உயர்த்தி காட்டினார்.
அப்போது உடன் படிக்கும் சக நண்பர் ஒருவரும் பட்டாகத்தியை சுழற்றியபடி கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நடனமாடி கொண்டாடினர். பின்னர் நண்பர்கள் சூழ மணமகன் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பட்டாகத்தியால் மண மேடையில் கேக் வெட்டி தனது மனைவிக்கு ஊட்டினார். இந்த நிகழ்வுகளை படம்பிடித்த நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இது தொடர்பாக சட்டவிரோதமாக பயங்கர ஆயுதங்களை வைத்திருத்தல், மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து கோயம்பேட்டில் உள்ள மாமியார் வீட்டில் விருந்துக்கு சென்று இருந்த மணமகன் புவனேசை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். பட்டாக்கத்தியால் புவனேசுடன் கேக் வெட்டிய அவரது மனைவி நந்தினி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண நிகழ்ச்சியில் ரூட் தல மாணவர்கள் கும்பலாக கலந்து கொண்டது தெரிய வந்தது. இந்த வழக்கில் மோகன்குமார் உட்பட 10 பேரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
newstm.in




