ஆண் நண்பருடன் நட்சத்திர விடுதியில் இருந்தப்போது கைது.. மீரா மிதுனை சென்னை அழைத்து வருவதில் தாமதம் !!
ஆண் நண்பருடன் நட்சத்திர விடுதியில் இருந்தப்போது கைது.. மீரா மிதுனை சென்னை அழைத்து வருவதில் தாமதம் !!

தலித் சமூக மக்கள் குறித்து நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதும் அவதூறாக பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மீரா மிதுன் எப்போதும் இதுபோன்று அவதூறாக பேசுவது வாடிக்கை என்றாலும் தற்போது சாதி குறித்து கீழ்தரமாக பேசியுள்ளார்.
பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு அளித்த புகாரின் பேரில், பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துகள் பேசி வீடியோ வெளியிட்டதாக நடிகை மீராமிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து கடந்த 11ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறும் சைபர் கிரைம் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், மீராமிதுன் சம்மனை ஏற்று ஆஜராகாமலும், தான் ஆஜராகாமல் இருந்ததற்கான விளக்கத்தை அளிக்காமல் இருந்தார். மேலும் அவர் தலைமறைவான நிலையில் காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர்.
இதைத்தொடர்ந்து தன்னை யாராலும் கைது செய்ய முடியாது. அப்படியே கைது செய்தாலும் பெருந்தலைவர்கள் சிறையில் இருந்ததைப்போல் நானும் இருப்பேன் என பேசி மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் தலைமறைவாக கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நட்சத்திர விடுதியில் மீராமிதுன் தனது ஆண் நண்பருடன் தங்கியிருந்தது குறித்து, சென்னை சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் நட்சத்திர விடுதிக்குச் சென்று மீராமிதுனை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், போலீசாருடன் மீராமிதுன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தன்னை துன்புறுத்துவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். எனினும் பெண் காவலர்கள் உதவியுடன் அவரை கைது செய்தனர். எனினும் ஒத்துழைக்க மறுத்து வருவதால் போலீசார் அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் இன்று மதியத்திற்குள் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளவும் சைபர் க்ரைம் போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். அதன் பின்னர் நடிகை மீராமிதுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

