ஜாமீன் கிடைத்தும் என்னாச்சு.. ஆர்யன் கான் வெளியே வருவதில் தாமதம் !!
ஜாமீன் கிடைத்தும் என்னாச்சு.. ஆர்யன் கான் வெளியே வருவதில் தாமதம் !!

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், கடந்த 3 ஆம் தேதி சோதனை நடத்தினர். சொகுசு கப்பலில் போதை விருந்து நடப்பதாக முன்கூட்டியே கிடைத்த தகவலின்பேரில் பயணிகள் போல் சென்று அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு போதை பொருள் பயன்படுத்தி பார்ட்டி நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணைக்குப் பின் ஆர்யன் கான் உள்ளிட்டோரை மும்பை ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் அடைத்தனர். இதற்கிடையே, ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களது ஜாமீன் மனு 2 முறை ரத்து செய்யப்பட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஆரியன்கான் போதை பொருள் பயன்படுத்தப்படவில்லை என்றும் கைதானும் போது அவரிடம் போதைப்பொருள் இல்லை என்றும் அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனிடையே, ஆரியன்கானை விடுவதற்கு அவரது தந்தையான ஷாருக்கானுடன் பேரம் பேசப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது.
இந்த நிலையில், ஆரியன்கான் ஜாமீன் மனு மீதான விசாரணை இரண்டு நாட்களாக நடந்து வந்தது. ஷாருக்கான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். இருதரப்பினரிடம் விசாரணை நடத்திய மும்பை உயர்நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவரின் ஜாமீன் நிபந்தனைகள் குறித்து இன்று அறிவிக்கபட்டது.
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இன்று சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகிறார் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான், மும்பை மன்னட் பகுதியில் உள்ள வீட்டுக்கு திரும்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஜாமீன் கிடைத்தும் ஆரியன்கான் உடனே வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சட்ட நடைமுறைகள் முடிந்து இன்று காலை ஆர்யன் கான் விடுதலை செய்யப்படுவார் என தெரிகிறது.

இதற்கிடையே, ஆர்யன் கான் உள்ளிட்ட மூன்று பேருக்கு, ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் 14 நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, ஆர்யன் கான் ரூ.1 லட்சம் மதிப்பிலான உத்தரவாதம் மற்றும் அதற்கு இணையாக, ஒன்று அல்லாத அதற்கு மேற்பட்டவர்கள் பிணை செலுத்தி ஜாமின் பெறலாம். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது. இந்த வழக்கில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களுடன் தொடர்பு கூடாது. அதேபோன்ற குற்றங்களில் ஈடுபடக் கூடாது.
சாட்சிகளை கலைக்கவோ, அழிக்கவோ முயற்சி செய்யக்கூடாது. மும்பையை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றால், விசாரணை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கான காரணத்தை அறிவிக்க வேண்டும். மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11:00 முதல் 2:00 மணி வரை ஆஜராக வேண்டும். நீதிமன்ற விசாரணையின் போது ஒவ்வொரு நாளும் ஆஜராக வேண்டும், என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
newstm.in

