சேலம் மாவட்டத்தை கலக்கிய ஏடிஎம் கார்டு கொள்ளையர்கள் கைது..!!
சேலம் மாவட்டத்தை கலக்கிய ஏடிஎம் கார்டு கொள்ளையர்கள் கைது..!!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அய்யூர் கிராமத்தைச் சேர்ந்த சிவானந்தன் (22), அதே பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன் (30). நண்பர்களான இருவரும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள வங்கி ஏடிஎம் மையங்களுக்கு அருகில் நின்று கொண்டு, பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் பெண்களிடம், பணம் எடுத்துக் கொடுப்பது போல் நடித்து, அசல் ஏடிஎம் கார்டுகளை வாங்கிக்கொண்டு போலி கார்டுகளை மாற்றி கொடுத்து பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர்.

கடந்த 2017 மற்றும் 2019-ம் ஆண்டு எடப்பாடி பகுதியில், முதியவர்களிடம் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து ஏமாற்றியதாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாழப்பாடி பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த இளைஞர்கள் 5 ஆண்டுகளாக ஏடிஎம் பணக் கொள்கையடித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களிடமிருந்து 38 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் எடப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

