ஆசிரியரை வகுப்பறையிலேயே மிரட்டி, தாக்க முயற்சி.. அரசுப்பள்ளி மாணவர்கள் அடாவடி
ஆசிரியரை வகுப்பறையிலேயே மிரட்டி, தாக்க முயற்சி.. அரசுப்பள்ளி மாணவர்கள் அடாவடி

அரசு பள்ளியில் 12 வகுப்பு ஆசிரியரை மாணவர்கள் தாக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தாவரவியல் ஆசிரியராக சஞ்சைகாந்தி பணியாற்றி வருபவர். இவர் ஏற்கனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணி மாறுதல் பெற்று இப்பள்ளிக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பு ஏ3 வகுப்புக்கு ஆசிரியர் சஞ்சய்காந்தி பாடம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வகுப்பறையில் மாணவன் மாரி என்பவர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது மாணவனை எழுப்பி திருப்புதல் தேர்தலுக்காக ரெகார்ட் நோட்டை எடுத்து வந்தாயே என கேட்டுள்ளார்.

அப்பொழுது மாணவன் எடுத்து வரவில்லை என திமிராக பேசியுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் தூக்கத்தில் எழுப்பியதாக அந்த மாணவன், ஆசிரியரை கையால் தாக்க முயற்சித்துள்ளார். அதேபோன்று ஆசிரியரை தரக்குறைவாகவும் பேசியிருக்கின்றார். மேலும், ஆசிரியரை உடனிருந்த மற்ற மாணவர்களும் தாக்க முயற்சித்து திட்டியுள்ளனர்.
அதனுடைய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை தொடர்ந்து ஆசிரியர் சஞ்சய்காந்தி தலைமையாசிரியரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் தலைமையாசிரியர் வேலன் தலைமையிலான ஆசிரியர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவின்பேரில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தற்பொழுது பள்ளியில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை சக மாணவர்கள் தாக்க முயற்சித்து திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in

