செல்போன் பறிக்க முயற்சி.. பிரபல நடிகை மீது சரமாரி தாக்குதல் !!
செல்போன் பறிக்க முயற்சி.. பிரபல நடிகை மீது சரமாரி தாக்குதல் !!

மொபைல் போன் திருடும் முயற்சியில் ஈடுபட்ட திருடன், திரைப்பட நடிகை ஷாலுவை தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நகர் பகுதிகளில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் சிலர் செயின்பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற குற்றங்களுக்கு சாமானியர்கள் மட்டுமல்ல பிரபலங்களும் அவ்வப்போது ஆளாகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரை வழிப்பறி திருடன் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கே.பி.ஆர் பூங்காவில் கடந்த நேற்று (நவ.14) இரவு 8 மணியளவில் நடிகை ஷாலு சவுரேசியா (29) நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இவர் தமிழ், பாலிவுட், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரை ஒருவர் வழிமறித்துள்ளார். அவரிடம் இருக்கும் பணம், மொபைல் போன் உள்ளிட்டவற்றை கொடுக்குமாறு அந்நபர் மிரட்டியிருக்கிறார். ஆனால், நடிகை ஷாலு சவுரேசியா செல்போனை கொடுக்க மறுத்தால், அந்நபர் நடிகைக்கு முகத்தில் ஒரு குத்து விட்டிருக்கிறார். மேலும் அருகே இருந்த பெரிய கல்லை எடுத்து தலையில் அடித்ததாகவும் கூறப்படுகிறது. நடிகையை தாக்கி அவரிடம் இருந்த மொபைல் போனை வலுக்கட்டாயமாக பறித்துவிட்டு அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த தாக்குதலில் நடிகை ஷாலுவின் கண் அருகேயும், தலையிலும் ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நடிகை ஷாலு, இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். நடிகை ஷாலு தமிழில் ‘என் காதலி சீன் போடுறா’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கே.பி.ஆர் பூங்காவில் இருந்த சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அருகேயுள்ள பகுதிகளில் இருக்கும் மற்ற சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து திருடனை பிடிக்கும் நடவக்கைகளில் போலீசார் இறங்கியுள்ளனர். பிரபல நடிகையிடம் திருட்டு சம்பவம் நடைபெற்றிருப்பது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

